படகு விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 32 பேரின் நிலைமை கேள்விக் குறியாகி உள்ளது.

ஆந்திராவில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருவதால், கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கடந்த சில நாட்களாகக் கோதாவரி ஆற்றில் படகு போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்ததால், படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் 63 சுற்றுலாப் பயணிகள், 9 பணியாளர்கள் என மொத்தம் 72 பேர் படகில் சென்றுள்ளனர். அப்போது, கச்சுலுரு என்ற இடத்தில் படகு சென்றபோது, எதிர்பாராத விதமாகப் படகு திடீரென்று கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில், 72 பேரும் ஆற்றில் மூழ்கிய நிலையில், உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்த சுமார் 25 பேர், ஆற்றில் மிதந்துகொண்டிருந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அவர்களை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து, ஹெலிகாப்டர் உதவியுடன் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்பதற்காக 60 வீரர்கள் அடங்கிய 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், 13 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மாயமான 32 பேரைத் தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆந்திர அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.