தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சந்தீப் கிஷன் அடுத்ததாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அதிரடியான பீரியட் படமாக தயாராகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் அடுத்த அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கிறது மைக்கேல் திரைப்படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிடும் மைக்கேல் திரைப்படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் கரண் C ப்ரொடக்சன் இணைந்து தயாரிக்க, சந்தீப் கிஷனுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், வரலக்ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கௌஷிக் மற்றும் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிரண் கௌசிக் ஒளிப்பதிவில், R.சத்ய நாராயணன் படத்தொகுப்பு செய்யும் மைக்கேல் படத்திற்கு சாம்.CS இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்திற்கு மைக்கேல் என டைட்டில் வைப்பதற்கு இன்ஸ்பிரேஷனாக தளபதி விஜயின் பிகில் திரைப்படத்தின் மைக்கேல் ராயப்பன் கதாபாத்திரம் தான் காரணம் என சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் நடிகர் சந்தீப் கிஷன். அந்த வகையில் மைக்கேல் என்ற டைட்டில் மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கிறது சில டைட்டில்கள் மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கும் ஆனால் ஏற்கனவே ஒரு பத்து பேர் அதை பயன்படுத்தி இருப்பார்கள், ஆனால் மைக்கேல் கொஞ்சம் தனித்து இருக்கிறதே? எனக் கேட்டபோது,

“இதுவரை யாருக்கும் வெளியில் சொல்லவில்லை. இது வேறு எந்த நோக்கத்திலும் சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான் சொல்லவில்லை. மைக்கேல் என்ற டைட்டிலுக்கான இன்ஸ்பிரேஷன் பிகில் திரைப்படத்தில் வந்த மைக்கேல் ராயப்பன் கதாபாத்திரம் தான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது கேட்கும்போது அந்தப் பெயர் பயங்கர ஸ்ட்ராங்காக இருந்தது. ராயப்பன் என்று வைக்க முடியாது எனவே மைக்கேல் நன்றாக இருக்கிறது என்று அதை பதிவு செய்து வைத்தோம். நாம் நினைக்கும் பைத்தியக்காரத்தனமான லவ் ஆக்ஷன் திரைப்படத்திற்கு அது எந்த மொழியாக இருந்தாலும் அதற்கு தகுந்த மாதிரி நடுநிலையான ஒரு டைட்டிலாக இது இருக்கும் என்றுதான் இதை பயன்படுத்தினோம்” என பதிலளித்துள்ளார். சந்தீப் கிஷனின் அந்த முழு பேட்டி இதோ…