தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாரிசு. முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தின் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையிலான பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவந்த வாரிசு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அதுதான் தளபதி 67!

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் உடன் மீண்டும் லோகேஷ் கனகராஜ் கைகோர்ப்பதும், உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியும், கைதி மற்றும் விக்ரம் திரைப்படங்களில் இருந்து உருவான LCUம், இவற்றுக்கெல்லாம் மேல் 100% லோகேஷ் படம் என படத்தின் முதல் அறிவிப்புக்கு முன்பே எதிர்பார்ப்புகளை கிளப்பிய தளபதி 67 திரைப்படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டது. எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி லியோ திரைப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் வகையில் தளபதி விஜயின் ஸ்டைலான ப்ரோமோ வீடியோ வெளியாகி வேற லெவல் ட்ரெண்ட் ஆனது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித்குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற, முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஃபிலோமின் ராஜின் படத்தொகுப்பில் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படத்திற்கும் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக லியோ ப்ரோமோவில் வெளிவந்த பிளடி ஸ்வீட் எனும் பாடல் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அடுத்த கட்டமாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் பிரபல நடிகையும் பிக் பாஸ் சீசன் 3 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலந்து கொண்டவருமான அபிராமி வெங்கடாசலம் இணைந்திருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில் கடந்த சில நாட்களாக அபிராமி வெங்கடாச்சலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஷ்மீரில் இருக்கும் வீடியோக்களை பகிர்ந்து வந்த நிலையில், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “உங்களது எதிர்காலம் இன்று நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதில் தான் உருவாகிறது. அதை இந்த மனிதர் மிகச் சரியாக செய்கிறார். வாழ்க்கைக்கான உத்வேகம்.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். எனவே தான் தற்போது லியோ திரைப்படத்தில் நடிப்பதை அபிராமி வெங்கடாசலம் உறுதிப்படுத்தி இருப்பதாக தெரிகிறது. இது குறித்த இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெகு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அபிராமி வெங்கடாசலம் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இருக்கும் அந்த புகைப்படம் இதோ…