கர்நாடகாவில் நடைபெற்று வந்த நடிகர் சித்தார்த்தின் சித்தா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை காவேரி பிரச்சனை காரணமாக சில போராட்டக்காரர்கள் பாதியில் நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்ததோடு பாதியிலேயே சித்தார்த்தை வெளியேறுமாறு கண்டனம் தெரிவித்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வுக்கு தற்போது நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் கன்னட மக்கள் சார்பில் மன்னிப்பு கேட்டுள்ளனர். மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான சித்தா திரைப்படம் நேற்று செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தனது தயாரிப்பு நிறுவனமான ETAKI என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்திருக்கும் சித்தா படத்தை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி மற்றும் சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் S.U.அருண் குமார் சித்தா படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

சித்தார்த் மற்றும் நிமிஷயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சித்தா திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சுரேஷ் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கும் சித்தா திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பின்னணி இசை சேர்த்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். என்று முடிவுக்கு வருமோ என எல்லோரும் எதிர்பார்க்கும் காவேரி பிரச்சனை தற்போது வழக்கம்போல் மீண்டும் பூதாகரமாக வெடித்திருக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் காவேரி பிரச்சனையின் காரணமாக கன்னட அமைப்புனர் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கன்னடத்தில் வெளியான நடிகர் சித்தார்த்தின் சிக்கு படத்தின் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள் பாதியிலேயே சித்தார்த் அவர்களை வெளியேறுமாறு வற்புறுத்தி வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது தொடர்பாக தங்களது வருத்தத்தை பதிவு செய்த நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். நடிகர் பிரகாஷ்ராஜ் தனது X பக்கத்தில், "பல ஆண்டுகளாக இருக்கும் இந்த பிரச்சனையில் அனைத்து அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்கு பதிலாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக.. சாமானியர்களையும் கலைஞர்களையும் இப்படித் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக .. கன்னடர்கள் சார்பாக மன்னிப்பு கோருகிறேன்… மன்னித்து விடுங்கள் சித்தார்த்” என பதிவிட்டுள்ளார். அதேபோல் நடிகர் சிவராஜ்குமார் கன்னட அமைப்புகளின் போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, “நடிகர் சித்தார்த் அவர்களுக்கு நடந்த இந்த சங்கடமான நிகழ்வுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என மேடையிலேயே மன்னிப்பு கேட்டு இருக்கிறார். நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களின் அந்த முக்கிய பதிவு இதோ…