தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் தங்கர் பச்சான் அவர்கள் இயக்கிய முதல் திரைப்படம் அழகி. முன்னதாக ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் வான்மதி, காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, காதலே நிம்மதி, மறுமலர்ச்சி, கண்ணெதிரே தோன்றினாள், பாரதி, ஜேம்ஸ் பாண்டு, பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களை ஒளிப்பதிவு செய்த தங்கர்பச்சான் இயக்கத்தில் நடிகர் பார்த்திபன் நந்திதா தாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வெளிவந்த அழகி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் அனைவரும் பாராட்டுகளையும் பெற்றது. குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசையில் அழகி திரைப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடல்களும் காலம் கடந்து நிற்கும் வகையில் மக்களின் மனதை வருடியது.

அழகி திரைப்படத்தில் நடிகர் பார்த்திபன் நடித்த சண்முகம் கதாபாத்திரத்தில் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சதீஷ் ஸ்டீபன். கணக்கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சதீஷ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக ஒளியிலே தெரிவது தேவதையா பாடலில் இளம் நடிகராக எதார்த்தமாக நடித்த சதீஷ் ஸ்டீபன் ரசிகர்களின் மனதில் மிக ஆழமாக பதிந்தார். தொடர்ந்து தங்கர்பச்சான் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த சொல்ல மறந்த கதை திரைப்படத்திலும் சதீஷ் ஸ்டீபன் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் பெரிதும் இதுவரை சதீஷ் ஸ்டீபனை பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய நடிகர் சதீஷ் ஸ்டீபன் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில், நீங்கள் தவறவிட்ட திரைப்படங்கள் என ஏதாவது இருக்கிறதா? என கேட்டபோது, "கில்லி திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்திற்கு பதிலாக தம்பி கதாபாத்திரம் வைக்கலாம் என்று இயக்குனர் தரணி சார் கூப்பிட்டு இருந்தார். அதற்கான டெஸ்ட் ஷூட் எடுத்தார்கள். அதன் பிறகு அது ஒரு பெண் கதாபாத்திரமாக இருக்கும் போது எதிர் எதிர் கதாப்பாத்திரமாக இருக்கும் அல்லவா? ஆண் - பெண் என்று அதில் இன்னும் சுவாரசியமாக நிறைய விஷயங்கள் பண்ண முடியும். என்பதற்காக அதை மாற்றி விட்டார்கள். அப்போது தெலுங்கில் தங்கை கதாபாத்திரம் தான் இருந்தது. அதனால் இங்கு தம்பி கதாபாத்திரம் பண்ணலாம் என நினைத்தார்கள். ஆனால் எனக்கு அந்த கதாபாத்திரம் தங்கை கதாபாத்திரமாகத்தான் இருக்க வேண்டும் என இருந்தது. தம்பியாக இருந்தால் அது சரியாக வராது. எனவே இதை நான் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன்." என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் சதீஷ் ஸ்டீபனின் அந்த முழு பேட்டி இதோ…