மிமிக்ரி கலைஞராக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கிய சிவகார்த்திகேயன் பின்னர் அதே விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக உயர்ந்தார். தனது கடின உழைப்பாலும் இடைவிடாது தனது கலகலப்பான பேச்சாளும் ரசிகர்களின் இதயம் கவர்ந்த சிவகார்த்திகேயன் சின்னத்திரையின் வாயிலாக வெள்ளித் திரையில் என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக களம் இறங்கிய சிவகார்த்திகேயன், தொடர்ந்து இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தொடர்ந்து தனக்கே உரித்தான பாணியில் கலகலப்பான திரைப்படங்களாக சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் எதிர்நீச்சல் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன.

இந்த வரிசையில் நடிகராக சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அசத்தலான என்டர்டெய்னிங் திரைப்படமாக சூப்பர் ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த அடுத்த திரைப்படங்களான மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ ஆகிய திரைப்படங்கள் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலுக்கு இழுத்துச் சென்றன. ஆனால் அதன் பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த வேலைக்காரன் சீமராஜா MR.லோக்கல் ஹீரோ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்க்கப்பட்ட அந்த மிகப்பெரிய வெற்றியை பெற தவறின. ஆனாலும் அதற்குப் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிவகார்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி சிவகார்த்திகேயனை முன்னணி கதாநாயகனாக உயர்த்தி பிடித்தது.

முன்னதாக கடந்த 2022ம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படமும் மெகா ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபீஸில் நூறு கோடி ரூபாய் வசூலித்தது. பின் கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை பெற தவறியது. அடுத்ததாக தற்போது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் SK24 திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமான ஏலியன் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக தயாராகி வருகிறது அயலான் திரைப்படம். இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ள அயலான் திரைப்படத்தில், இஷா கோபிகர், சரத் கேல்கர், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்கும் அயலான் திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு அயலான் படத்தின் முதல் பாடலாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடி வெளிவந்த வேற லெவல் சகோ பாடல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அட்டகாசமான ஏலியன் திரைப்படமாக தயாராகி வரும் அயலான் திரைப்படத்தின் VFX பணிகளுக்காக மட்டுமே 40 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட VFX பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கலாட்டா குழுமம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், சிவகார்த்திகேயனுடன் ஹீரோ, டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் கைகோர்த்த KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அயலான் திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெகு விரைவில் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள அந்த அறிவிப்பு வீடியோ இதோ…