தனது கணவர் ராகுல் ஷர்மாவுடன் விவாகரத்து செய்ய இருப்பதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு நடிகை அசின் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்து இருக்கிறார். இந்திய சினிமாவில் மிக முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர் நடிகை அசின். தமிழில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த அசின் தொடர்ந்து உள்ளம் கேட்குதே, கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு, ஆழ்வார், போக்கிரி, வேல், தசாவதாரம், காவலன் என தொடர்ச்சியாக சூர்யா தளபதி விஜய் அஜித் ஷியான் விக்ரம் உலக நாயகன் கமல்ஹாசன் என நட்சத்திர நாயகர்கள் அனைவருடன் இணைந்து நடித்து நட்சத்திர நாயகியாகவே வலம் வந்தார். கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளிவந்த ஆல் இஸ் வெல் படத்தில் கதாநாயகியாக நடித்தார் அசின்.

பின்னர் 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் அதிபர் ராகுல் ஷர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகை அசின் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. கணவர் குழந்தை என மிகுந்த மகிழ்ச்சியோடு தனது வாழ்க்கையை நகர்த்தி வரும் நடிகை அசினின் கம்பேக்கிற்காக திரை உலக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இதுகுறித்து நடிகை அசின் ஏதேனும் முடிவெடுப்பாரா என்றும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு தான் வருகின்றன. இதற்கிடையில் நடிகை அசின் தனது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய இருப்பதாக தற்போது சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

இப்படி நடிகை அசின் விரைவில் தனது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் பரவ காரணமாக சொல்லப்படும் முக்கிய விஷயம் என்னவென்றால் நடிகை அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கணவர் ராகுல் ஷர்மா உடன் சேர்ந்து இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருக்கிறார் என்பது தான். அதிலும் தனது கல்யாண புகைப்படங்கள் உட்பட ராகுல் ஷர்மாவோடு இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் அசின் நீக்கி இருப்பதால் ஒருவேளை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து அசின் இதனை செய்திருப்பதாக பேசப்படுகிறது. இந்த நிலையில் இந்த வதந்திகளை பார்த்த நடிகை அசின் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே பதிலும் அளித்திருக்கிறார்.

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில், “கோடை விடுமுறையில் குடும்பத்துடன் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த கற்பனையான கொஞ்சம் கூட நம்ப முடியாத செய்தியை கடந்து வந்தோம். எங்கள் திருமணத்திற்காக எங்கள் குடும்பத்தோடு அமர்ந்து திட்டமிட்ட விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் நாங்கள் பிரிந்து விட்டோம் என்ற செய்தியை கேட்டோம்... உண்மையாகவா? தயவு செய்து சிறப்பாக எதையாவது முயற்சி செய்யுங்கள்... விடுமுறையில் ஐந்து நிமிடங்களை வீணடித்ததாக உணர்கிறேன். மற்றபடி அற்புதமான விடுமுறை நாள் தான்.” என குறிப்பிட்டு இருக்கிறார். நடிகை அசினின் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் இதோ…