அதிவேகமாக 350 விக்கெட்டுகள் வீழ்த்தி கிரிக்கெட் வீரர் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு, இந்திய அணி 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 131.2 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 431 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் அதிக பட்சமாக 7 விக்கெட்டுகள் எடுத்தார்.

தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி, 67 ஓவர்கள் விளையாடியது. இதில், 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்து, டிக்ளேர் செய்தது. இதனால், 395 ரன்களை இலக்காகத் தென்னாப்பிரிக்கா அணிக்கு, இந்திய அணி நிர்ணயித்தது.

இதனிடையே, இந்த 2வது இன்னிங்சில் இந்திய வீரர் அஸ்வின் ஒரு விக்கெட் எடுத்தாலே, அவர் இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் உலக சாதனையைச் சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, 2 வது இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது. இதில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென்னாப்பிரிக்கா வீரர் டி புருயின் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம், முத்தையா முரளிதரனின் உலக சாதனையைச் சமன் செய்தார்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், ஏற்கனவே 66 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 350 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். அதன்படி, இன்று 66 வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அஸ்வின், தனது 350 வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் இருவருமே, 66 போட்டிகளில் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். அஸ்வின், இன்னும் ஒரு விக்கெட் எடுக்கும் பட்சத்தில், முத்தையா முரளிதரனின் சாதனையை முந்தி, அவர் புதிய உலக சாதனை படைக்க உள்ளார்.

இதனிடையே, அதிவேகமாக 350 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்த அஷ்வினுக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.