நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இருவரும் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் போர் தொழில் திரைப்படத்தின் டீசர் வெளியானது. தென்னிந்திய சினிமாவில் இன்றைய அமையாத நடிகர்களில் ஒருவராக ஹீரோ - வில்லன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவரும் நடிகர் சரத்குமார் இந்த 2023 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடித்த வாரிசு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்த ருத்ரன், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கஸ்டடி ஆகிய திரைப்படங்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார். குறிப்பாக இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களின் நடிப்பில் கிரிமினல், தி ஸ்மைல் மேன், பரம்பொருள், நிறங்கள் மூன்று ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

அதேபோல் தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் வரிசையாக சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என என ஐந்து திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த மாடர்ன் லவ் சென்னை எனும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் ஆந்தாலஜி வெப் சீரிஸில் நடித்துள்ள அசோக் செல்வன் தற்சமயம் அறிமுக இயக்குனர் CS.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகும் சபா நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் அசோக் செல்வன் - சரத்குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் போர் தொழில்.

முன்னதாக அசோக்செல்வன் நடிப்பில் மிக முக்கிய படமாக வெளிவந்த தெகிடி திரைப்படத்தின் பாணியில் பக்கா சஸ்பென்ஸ் திரில்லராக போர் தொழில் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் போர்த் தொழில் திரைப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோரோடு இணைந்து நடிகை நிக்கிலா விமல் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் இ4 எக்ஸ்பிரிமெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் போர் தொழில் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். பிரபல இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த போர் தொழில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. தற்சமயம் போர் தொழில் திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற ஜூன் 9ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போர் தொழில் திரைப்படத்தின் விறுவிறுப்பான டீசரும் தற்போது வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் போர்த் தொழில் திரைப்படத்தின் டீசர் இதோ…