நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தின் கலை இயக்குனர் சதீஷ் லியோ திரைப்படம் குறித்து எமோஷனலாக பதிவிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் அடுத்ததாக தன் திரைப்பயணத்தில் 68வது படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதனிடையே மாஸ்டர் திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் இணைந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் தயாராகும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

ஆரம்பம் முதலே மாநகரம் , கைதி என தனது படங்களால் ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் எனும் மெகா ஹிட் படத்திற்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் உடன் கைகோர்த்த விக்ரம் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் திரைப்படமாக பெரும் வெற்றி பெற்றது. இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் உடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் இந்த லியோ திரைப்படம் இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் SS.லலித்குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களில் 125 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது.

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கும் திரிஷா லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னதாக விக்ரம் படத்தில் முக்கிய சிறப்பு தோற்றத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் வந்தது போல லியோ திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ராம்சரண் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்து அதிரடி அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைத்தி ஆகியோர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தின் முதல் பாடல் “நான் ரெடி” பாடல் ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஹிட் ஆனது. தற்சமயம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் கலை இயக்குனரான சதீஷ்குமார் அவர்கள், “லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது... செட்கள் எல்லாம் கலைக்கப்பட உள்ளன.. அரை ஆண்டு உங்களோடு இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது விஜய் சார்... நாங்கள் இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் காத்திருப்போம் உங்களோடு இணைந்து பணியாற்ற... நாங்கள் உங்களை மிஸ் பண்ணுவோம் சார்…” என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். சதீஷ்குமாரின் அந்த பதிவு இதோ…