தென்னிந்திய சினிமாவின் தன்னிகரற்ற பெரும் கதாநாயகனாகவும் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாகவும் திகழும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாரிசு. அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த வாரிசு படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமான தளபதி 67 என அழைக்கப்பட்ட லியோ படத்தை தொடங்கினார் விஜய். மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்த தளபதி விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து மேயாத மான், ஆடை மற்றும் குலு குலு ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். முன்னதாக தொடர்ந்து 50 நாட்கள் காஸ்மீரில் நடைபெற்ற லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது.வருகிற ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாள் அன்று லியோ திரைப்படத்தின் ஸ்பெஷல் பரிசு ஒன்று ரசிகர்களுக்காக காத்திருக்கிறது என தயாரிப்பாளர் அறிவித்திருந்த நிலையில், தற்போது படத்தின் கலை இயக்குனர் சதீஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் LEO 🔺️⏳ என பதிவிட்டுள்ளார். எனவே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக புதிய அப்டேட் ஒன்று வர இருப்பதாக தெரிகிறது. கலை இயக்குனர் சதீஷ்குமார் இந்த ட்விட்டர் பதிவை தற்போது நீக்கி இருந்தாலும் அதன் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்த ரசிகர்கள் லியோ படத்தின் அப்டேட்டுக்காக உற்சாகத்தோடு காத்திருக்கின்றனர்.