தமிழ் திரையுலகின் மிக சிறந்த திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமானவர் கே பாக்ய ராஜ். அவரையே விஞ்சும் அளவு கவனம் பெற்றவர் அவரது உதவி இயக்குனர் பார்த்திபன். பாக்யராஜ் அவர்களின் உதவி இயக்குனராகவும் டப்பிங் கலைஞராகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்த பார்த்திபன் 1989 ல் வெளியான ‘புதிய பாதை’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். புதிய பாதை திரைப்படம் நேர்மறையான விமர்சனத்துடன் நல்ல வசூலையும் படைத்தது. முதல் படத்திலே தேசிய விருதையும் இரண்டு மாநில விருதையும் வென்று தமிழ் திரையுலகில் கவனம் பெற்றார். அதை தொடர்ந்து பார்த்திபன் பல ஹிட் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தனித்துவமான திரைப்படங்கள் யாரும் செய்யாத முயற்சிகள் என்று ஒவ்வொரு முறை திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் பார்த்திபன் 15 திரைப்படங்களில் இயக்குனராகவும் 12 திரைப்படங்களை தயாரித்துள்ளார். அதே நேரத்தில் நடிகராகவும் தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இதுவரை 70 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பார்த்திபன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கத்தில் வெளியானப் பொன்னியின் செல்வன் படத்தில் சிறிய பழுவேட்டையராயர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்து கவனம் பெற்றார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்த கையோடு பார்த்திபன் புதிய படத்தை இயக்குவதாக தெரிவித்திருந்தார். மேலும் தொடர்ந்து மூன்று படங்களை பார்த்திபன் இயக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார். அதன்படி முதல் படத்திற்கு ‘52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்றும் இரண்டாம் படத்திற்கு ‘ஆண்டாள்’ என்றும் பெயரிட்டிருந்தார். மூன்றாவது படம் குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. மேலும் பார்த்திபன் தன் படத்திற்கான லோகேஷன் பார்க்கும் வேலையில் தற்போது பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் படத்தில் ஒப்பந்தாமாக முடியாது என்று ஏ ஆர் ரஹ்மான் கூறியுள்ளார் இதனை பார்த்திபன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில் , “பழகுதல் காதலால் விலகுதலும் காதலால் ஆதலால்…. ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம் இறுதிவரை! வரும் படத்திலும்-இரு வரும் இணைவோமென நினைத்து இயலாதபோது நண்பர் arr அவர்களிடமிருந்து வந்த மிருது மெயில்.” என்று அவர் ஸ்டைலில் குறிப்பிட்டு ஏ ஆர் ரஹ்மான் அனுப்பிய மின்னஞ்சலை இணைத்து பதிவிட்டிருந்தார்.

ஏ ஆர் ரஹ்மான் அனுப்பிய மின்னஞ்சலில், “தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட வகையிலும் அதிக வேலை உள்ளதால் உங்கள் படத்தை இந்த முறை ஏற்க முடியவில்லை. உங்கள் கதைகளை ஆர்வத்துடன் கேட்டு நான் வியந்திருக்கிறேன். திறமையான ஆளுமை இயக்குனர்களில் நீங்களும் ஒருவர்.. உங்கள் படத்திற்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஏ ஆர் ரஹ்மான் – பார்த்திபன் ரசிகர்கள் வருத்தத்தில் அப்பதிவினை வைரலாக்கி வருகின்றனர்.

பார்த்திபன் அவர்களுடைய இயக்கத்தில் முந்தைய திரைப்படமான ‘இரவின் நிழல்’ என்ற படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைதிருப்பார். சிங்கிள் ஷாட் முறையில் எடுக்கப்பட்ட இப்படம் உலக மேடைகளை வியக்க வைத்து தமிழ் திரையுலகினரை பெருமைபட வைத்தது. இதில் ஏஆர் ரஹ்மான் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.