தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ம் தேதி இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான திரைப்படம் ‘தி கேராளா ஸ்டோரி’. இப்படத்தின் முன்னோட்டம் வெளியான நாளிலிருந்து இன்று வரை இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி அதிகம் பேசப்பட்டு வருகிறது. மத வெறுப்பை தூண்டும் அளவு இப்படம் அமைந்துள்ளதாக பல இடங்களில் பல ஆர்பாட்டங்கள் நடைபெற்றது. தடைகளை மீறி திரையரங்குகளில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வட இந்தியா மாநிலங்களில் அமோக வரவேற்பை அளித்து வெற்றிபெற செய்தனர். விமர்சன ரீதியாக கலைவையான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை செய்தது.

ஒருபுறம் வட இந்திய மாநிலங்களில் வரவேற்பு இருக்க மறுபுறம் மேற்கு வங்கத்தில் அரசே இப்படத்திற்கு தடை விதித்தனர். தமிழ்நாட்டில் தொடர் எதிர்புகளினால் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் தானாகவே முன் வந்து இப்படத்தை புறக்கணித்தனர். பின் படக்குழுவினரின் நீதி மன்ற போராட்டத்திற்கு பின் தடை உத்தரவை நீக்கினார். இருந்தாலும் இப்படம் குறிப்பிட்ட பல இடங்களில் ஓடவில்லை. உண்மை சம்பவத்தை அடிப்படையாக உருவான தி கேரளா ஸ்டோரி என்ற விளம்பர படுத்தி பிரச்சார திரைப்படத்தை கொடுத்துள்ளனர் என்று தி கேரளா ஸ்டோரி திரைப்பட இயக்குனர் சுதிப்டோ சென் மீது குற்றசாட்டுகள் குவிந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி திரைப்படம் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் இயக்குனர் சுதிப்டோ சென்.

பிரபல தொழிலதிபரான சகாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராயின் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு ‘சஹாரா ஸ்ரீ’ என்று பெயரிட்டுள்ளனர். லெஜென்ட் ஸ்டுடியோ மற்றும் டாக்டர் ஜெயந்தி லால் காடா அவர்களின் பென் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனருடன் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி அமைத்தது குறித்து ரசிகர்கள் பல எதிர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஏ ஆர் ரஹ்மான் பல சமூக நல்லிணக்கங்களை பேசுபவர் ஏன் இப்படி சர்ச்சைக்குள் சிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அதே நேரத்தில் திரைப்படம் அனைத்து பிரிவினையையும் கடந்தது திரைப்படங்களை கலையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு ஆதரவாகவும் கருத்துகள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏ ஆர் ரஹ்மான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ என்ற படத்திற்கும் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார். மேலும் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.