இந்திய திரையுலகில் தன்னிகரற்ற கலைஞர் என்றால் அவர் ஏ ஆர் ரஹ்மான் தான். ரோஜா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி புது விதமான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பல தசாப்தங்களாக ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பாடல்களை கொடுத்தது வருபவர். தமிழ் மட்டுமல்லாமல் இந்திய மொழிகளில் பெரும்பாலான மொழிகளில் இசையமைத்து இந்திய அளவு தன்னிகரற்ற கலைஞராய் இருப்பவர். இதுமட்டுமா உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதினை தன் இரு கரங்களால் ஏந்தி உலக மேடையில் தமிழர் பெருமையை உலகறிய செய்தவர். 90 கள் தொடங்கி இன்று வரை இவர் இசையே பல மொழி மக்களின் ரசனைக்கு தீனி போட்டு கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை ஏ ஆர் ரஹ்மானின் இசை எந்த ஒரு சூழலிலும் தொய்வடையாமல் அதே உற்சாகத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழில் ஏ ஆர் ரஹ்மான் இரவின் நிழல், பொன்னியின் செல்வன், கோப்ரா,வெந்து தணிந்தது காடு ஆகிய முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைத்தார். மேலும் தற்போது ஏ ஆர் ரஹ்மான் இசையில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், பத்து தல ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. முன்னதாக சிலம்பரசன் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வெளியாகவுள்ள பத்து தல படத்தின் நம்ம சத்தம் பாடல் வெளியாகி தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் படங்களுக்கு இசையமைப்பது மட்டுமல்லாமல் ரசிகர்கள் முன்னிலையில் பல விதமான இசை நிகழ்வுகளில் பங்கேற்பதும் உண்டு. இவரது பொதுவான இசை நிகழ்வுகளுக்கு கூட்டம் அலைமோதும். பல ஆயிரகணக்கான மக்கள் அணி திரளும் நிகழ்வாக ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்வு ஒவ்வொரு காலமும் அமையும். அந்த வகையில் வரும் மார்ச் மாதம் புனே ராஜபகதூரில் நடைபெறவுள்ள ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. அதற்கான டிக்கெட்டுகள் தற்போது இணையத்தில் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிகழ்வு குறித்து விளம்பர படத்தை ஏ ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதில் ரசிகர் ஒருவர் சென்னையில் எப்போது இசை நிகழ்வு நடத்த போகிறீர்கள் என்ற வகையில் “சார் சென்னை என்று ஒரு நகரம் உள்ளது..உங்களுக்கு நியாபகம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். இதனையடுத்து ஏ ஆர் ரஹ்மான் ரசிகர் கேள்விக்கு, “அனுமதி. அனுமதி..அனுமதி .. அது 6 மாத கால செயல்பாடு” என்று குறிப்பிட்டிருந்தார்.

Permissions,permissions,permissions 6months process ..✊ https://t.co/Lx2879U75B

— A.R.Rahman (@arrahman) February 8, 2023

இதனையடுத்து ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்கள் அந்த பதிவை பகிர்ந்து உலக புகழ்பெற்ற ஏ ஆர் ரஹ்மானுக்கே ஒரு இசை நிகழ்வு அனுமதி பெற 6 மாத காலம் ஆகின்றதா என ஆச்சர்யத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி ரசிகரின் கேள்வியும் ஏ ஆர் ரஹ்மான் பதிலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.