தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் வித்யாசமான கதைக்களத்தில் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ஃபர்ஹானா. ட்ரீம் வாரியார் பிக்ஸர் எஸ் ஆர் பிரபு தயரிப்பில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து செல்வராகவன், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல திரைப்படங்களான ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான ஃபர்ஹானா திரைப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது. அதே நேரத்தில் இஸ்லாமிய மதத்தினரை இழிவு செய்யும்படி திரைப்படம் உள்ளதென்று விமர்சனமும் எழுந்து படத்தை தடை செய்ய ஆர்பாட்டங்களும் நிகழ்ந்தது. இந்நிலையில் தடைகளை மீறி ஃபர்ஹானா திரைப்படம் இன்று தமிழகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்று வருகிறது.

இந்நிலையில் திருவாரூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தைலம்மை திரையரங்கில் ஃபர்ஹானா திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதென திரையரங்க நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து பார்வையாளர்கள் படம் பார்க்காமல் திரும்பி சென்றனர். படத்திற்கு எழுந்த எதிர்ப்பினாலும் முன்னதாக முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிப்பினாலும் இந்த நடவடிக்கையில் திரையரங்கம் இறங்கியுள்ளது. மேலும் திருவாரூரில் பல திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக படக்குழு சார்பில் இப்படம் எந்தவொரு மதத்தினரையும் இழிவு படுத்தும் வகையில் இப்படம் அமையவில்லை என்று விரிவான விளக்கம் கொடுக்கப் பட்டும் இது போன்ற நிகழ்வுகள் நடந்தேறி வருகிறது. இதுவரை ஃபர்ஹானா திரைப்படம் பார்த்த ரசிகர்கள் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களையே இதுவரை தெரிவித்து வருகின்றனர்.