தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகவும் தென் இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் வளம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் டிரைவர் ஜமுனா. வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா திரைப்படம் த்ரில்லர் படமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து ஃபர்ஹானா, சொப்பன சுந்தரி, துருவநட்சத்திரம் மற்றும் தீயவர் கொலைகள் நடுங்க ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. மேலும் முதல் முறை பாலிவுட்லும் களமிறங்கியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மாணிக் எனும் ஹிந்தி திரைப்படமும் தயாராகியுள்ளது

முன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷ் & RJபாலாஜி உடன் இணைந்து நடித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படமும், மலையாளத்தில் வெளிவந்து இந்திய சினிமாவில் பலரது கவனத்தையும் ஈர்த்த சூப்பர் ஹிட் திரைப்படமான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படமும் வரும் பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்ய, ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சென்ட் இசையமைத்துள்ளார். RDC மீடியா நிறுவனம் தயாரித்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்ட்ரி நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களிடம் சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து சர்ச்சையான கேள்வி கேட்கப்பட்டபோது, "கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதான்! எந்த கடவுளுமே என் கோவிலுக்கு இவர்கள் வரக்கூடாது அவர்கள் வரக்கூடாது என சொன்னது இல்லை. எல்லாமே மனிதர்கள் உருவாக்கிய சட்டம்" என ஐஸ்வர்யா ராஜேஷ் பதிலளித்துள்ளார்.