ஆரம்ப கட்டத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களமிறங்கி படிப்படியாக வளர்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகவும் சிறந்த நடிகையாக திகழ்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த வளர்ச்சிக்கும் கடின உழைப்பிற்கும் உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார் நாகமணி. முன்னதாக ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த வெற்றிக்கு மிக முக்கிய துணையாக இருந்த அவரது தாயாரை தமிழ்நாடு ஆளுநர் அன்னையர் தினத்தன்று விருது வழங்கி கௌரவித்தார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் தாயார் நாகமணி, நம்மோடு பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் கணவரை இழந்த பிறகு நான்கு குழந்தைகளை கரை சேர்க்க கடினமாக உழைத்தது குறித்து பேசினார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷின் மூத்த சகோதரர்களான தனது முதல் இரண்டு மகன்களை பறி கொடுத்தது குறித்தும் பேசினார். அப்படி பேசுகையில்,

"நான்கு பக்கமும் கஷ்டபட்டு வேலை செய்து கடைசியில் பெரிய பசங்களாக ஆகிவிட்டார்கள். பெரிய பையன் ஒரு வலது கை போல் இருக்கிறான். இடது கைக்கு இன்னொரு மகன் இருக்கிறான். மூன்றாவது கைக்கு மணிகண்டா பரவாயில்லை.. நான்காவது ஐஸ்வர்யாவை திருமணம் செய்து அனுப்பி விடலாம் என்று தான் நினைத்து வாழ்ந்தேன். பார்த்தால் முதல் பையன் கைநழுவி போய் விட்டான். அவன் போனவுடன் வலது கை போய் ஒரு றெக்கை உடைந்த மாதிரி இருந்தது. வாழ்க்கையில் என்ன கணவரும் இறந்துவிட்டார். பசங்களை விட்டு விட்டு போய்விட்டார். பிறகு என்ன செய்வது என நினைக்கும் போது, ஏதோ நல்லபடியாக இருக்கிறோம் என நினைத்து இருக்கும் போது, இந்த பையன் இப்படி செய்து விட்டானே என ஒரு பக்கம்… அவன் போன பிறகு சரி அவன் போய் விட்டான் என கொஞ்சம் தெம்பாக இருக்கும்போது இரண்டாவது மகன் விபத்தில் இறந்து விட்டான். அவனும் இறந்த பிறகு எனக்கு மனமே உடைந்துவிட்டது. என்ன செய்வது என்றே புரியவில்லை. அப்போது இவன் (மணிகண்டா) மட்டும்தான் சம்பாதித்துக் கொண்டிருந்தான். ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு 25,000 ரூபாய் வரும். அதை வைத்து என்ன செய்யலாம் என பார்த்துக் கொண்டிருந்த போது தான் ஐஸ்வர்யா மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு போனார். மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா போகும்போது இரண்டாவது மகன் இருந்தான்.” என தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் உங்கள் முதல் மகனுக்கு என்ன ஆயிற்று என கேட்டபோது, “அவனுக்கு உடல் நலம் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது அவன் தற்கொலை செய்து கொண்டான். அது ஒரு கதை 20 வயதிலேயே இறந்து விட்டான். இரண்டாவது மகன் நண்பர்களோடு போன போது விபத்து... அவன் மட்டும் இறந்து விட்டான். மீதி இரண்டு பேர் நன்றாக இருக்கிறார்கள். என் மகன் மட்டும் இறந்து விட்டான்.” என தெரிவித்த அவரிடம், முதல் மகனுக்கு அப்படி என்ன அழுத்தம் இருந்தது குடும்பத்தில் ஏதாவது அழுத்தமா? என நாம் கேட்டபோது, “அதெல்லாம் ஒன்னும் இல்லை காதல்” என பதில் அளித்துள்ளார். இன்னும் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் தாயார் நாகமணி அவர்களின் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சியின் முழு வீடியோ இதோ…