தமிழ் சினிமாவில் துணை நடிகராக பல படங்களில் நடித்து பசங்க படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல். முதல் படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் தனது பங்கை சிறப்பாக செய்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். பின் இயக்குனர் சற்குணம் அவர்களுடன் கூட்டணி அமைத்து ‘களவாணி’ படத்தில் நடித்தார். துள்ளலான தெனாவட்டான தன் நடிப்பிற்கு தமிழ் சினிமா நடிகர் விமலை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. தொடர்ந்து வாகை சூடவா, தூங்கா நகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, புலிவால், தேசிங்கு ராஜா, சன்னல் ஓரம், மஞ்சப்பை போன்ற அட்டகாசமான பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகர்களில் ஒருவராய் வலம் வந்தார். பின் திடீர் ஏற்பட்ட சறுக்கல்களில் தொடர் தோல்வி படங்களில் நடித்து மார்கெட்டை இழந்தார் நடிகர் விமல்.

பின் நீண்ட நாள் கழித்து மீண்டும் மிரட்டலான கதைகளத்தை தேர்ந்தெடுத்து ‘விலங்கு’ என்ற இணைய தொடரில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் வெற்றியுடன் நுழைந்தார். உற்சாகத்தில் நடிகர் விமலை வரவேற்க தற்போது விமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, தெய்வ மச்சான், குலசாமி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இருபடங்களும் வரும் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தெய்வ மச்சான் படம் குறித்து நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில் தனது திரைப்பயணத்தில் தோல்வி படங்களாக அமைந்த படங்கள் குறித்து பேசுகையில்,

"நான் கட்டாயத்தில் நடிச்சா எல்லா படமும் தோல்வி படங்கள் தான். நம்ம இஷ்டப்பட்டு நடிச்ச படமும் ஓடும் னு சொல்ல முடியாது. ஒரு சில படங்கள் காசு வாங்கி கொடுக்கும் ஒரு சில படங்கள் பேர் வாங்கி கொடுக்கும். கட்டாயத்தில் நடிச்சா விழுந்துடுவோம்.." என்றார் விமல்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், "நான் ஆரம்பத்தில் படம் நடிக்கும் போதெல்லாம் எல்லா இயக்குனர்களும் பாண்டிராஜ், சர்குணம் என்று நினைத்து இருந்துவிட்டேன். அப்படி எல்லாரும் இருக்கு முடியாது.. அதெல்லாம் தப்புனு போக போகதான் புரிஞ்சுது. சில பேர் நல்லா பேசுவாங்க.. நம்ம இவ்ளோ திறமை இருக்கே னு நினைப்போம். ஆனா படம் எடுக்க தெரியாது. சிலர் பேசமாட்டாங்க ஆனா திரையில் மிரட்டி விடுவாங்க.. அப்படியும் பார்த்துட்டேன் இப்படியும் பார்த்துட்டேன். அதனால பேச்சை குறை வேலைய பாரு னு இறங்கிட்டேன்" என்றார். மேலும் தொடர்ந்து "வாகை சூடவா படம் எடுக்கும் போதுலாம் நல்ல வரும் னு நினைச்சோம்.பேர் விருதுலாம் வாங்கி கொடுத்தது. ஆனால் வர்த்தக ரீதியா வெற்றி பெறவில்லை. எல்லோரும் வாகை சூடவா படம் பார்த்திருக்காங்க.. எல்லோரும் சொல்றாங்க.. ஆனா வருமானம் குறைவா இருக்கு" என்றார் நடிகர் விமல்.

மேலும் நடிகர் விமல் அவர்கள் தனது திரைப்பயணம் குறித்து பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..