இப்படி ஒரு கேங்க்ஸ்டர் படம் எடுக்க முடியுமா என்று வியக்க வைத்து தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த படம் 'ஜிகர்தண்டா' . மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து அடிப்படையில் டார்க் காமெடி தளத்தில் ஒரு கதையை கொடுத்து சேது என்ற கதாபாத்திரத்தை நினைவில் பொருத்திய படம் ஜிகர்தண்டா. படம் 2014 ல் வெளியாகி பெரியளவு வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சேது கதாபாத்திரத்தில் நடித்த பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை கொடுத்த படம் இது. இந்த படத்திற்கு இன்றளவு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. சித்தார்த், லஷ்மி மேனன், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, கருணாகரன் நடிப்பில் உருவான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டாவின் இரண்டாம் பாகம் எட்டு ஆண்டுகளுக்கு பின் இயக்கவுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதிரடியான வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டார்.

'ஜிகர்தண்டா டபுள் X' என்று பெயரிடப்பட்டுள்ள ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ், வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். எஸ்.ஜே.சூர்யா முன்னதாக காரத்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'இறைவி' படத்தில் நடித்து புகழ் பெற்றார், அவரது திரைப்பயணத்தில் நடிகராக முக்கிய திருப்புமுனையாக இறைவி படம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் X ல் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் படபிடிப்பு தளத்திலிருந்து எடுத்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். மேலும் நடிகர் ராகவா லாரன்ஸ் குறித்தும் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவில், "36 நாட்கள் ஒரே மூச்சில் ஒரே கட்ட படப்பிடிப்பு. என்ன ஒரு அற்புதமான படப்பிடிப்பு, கான்செப்ட், செட், எவ்வளவு பெரிய செலவு, சிறந்த ஒளிப்பதிவு, மிகச் சிறந்த தயாரிப்பு மதிப்பு!. இந்த வாய்ப்புக்கு மிக்க நன்றி கார்த்திக் சுப்புராஜ். நான் பார்த்த அற்புதமான உள்ளம் நடிகர் ராகவா லாரன்ஸ்" என எஸ் ஜே சூர்யா பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் அந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர் . வரும் கோடை காலத்தில் சம்மர் ரிலீஸாக ஜிகர்தண்டா டபுள் X திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.