தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்த மாநாடு திரைப்படம் பல தடைகளையும் தாண்டி ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஆனது.

இதனையடுத்து மீண்டும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்து உள்ள சிலம்பரசன் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெற்றிக் கூட்டணியான கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரகுமான் - சிலம்பரசன் கூட்டணி 3-வது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் ஒபெலி கிருஷ்ணா இயக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் சிலம்பரசன் அடுத்ததாக, இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் படத்திலும் நடிக்கவுள்ளார். வெந்து தணிந்தது காடு மற்றும் கொரோனா குமார் ஆகிய திரைப்படங்களை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்கள் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சிலம்பரசனுக்கு இன்று (ஜனவரி 11) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பல்கலைக்கழகம், திரைத்துறையில் நடிகர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக திகழும் சிலம்பரசனின் திறமை மற்றும் திரைத்துறையில் அவரது பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது.

இது குறித்து நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கமிட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும் & ஐசரி.K.கணேஷ் அவர்களுக்கும் நன்றி…
தமிழ் சினிமாவிற்கும், எனது அப்பா மற்றும் அம்மாவுக்கும் இந்த மிகப்பெரிய கௌரவத்தை சமர்ப்பிக்கிறேன்... இறுதியாக எனது ரசிகர்கள் , நீங்கள் இல்லாமல் நான் இல்லை!
நன்றி இறைவா !!

என தெரிவித்துள்ளார். நடிகர் சிலம்பரசன் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

Thanking all the committee members of Vels University & @IshariKGanesh for bestowing the Honorary Doctorate upon me.
I dedicate this huge honour to
Tamil cinema, my Appa & Amma! Cinema happened to me because of them!
Finally - my fans, #NeengailaamaNaanilla
Nandri Iraiva! ❤️ pic.twitter.com/YIc6WyGCvR

— Silambarasan TR (@SilambarasanTR_) January 11, 2022