தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் நடிகர் ராஜ்கிரண். கடந்த 1989 ல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘என்ன பெத்த ராசா’ படம் மூலம் திரையுலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் நடிகர் ராஜ்கிரண். அதனை தொடர்ந்து 1991 ல் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் நடிகர் ராஜ் கிரண். பின்னர் தொடர்ந்து கிராமிய படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார் நடிகர் ராஜ்கிரண். அதன்படி அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், பாசமுள்ள பாண்டியரே ஆகிய படங்களில் ஹீரோவாக ஜொலித்தார். ஹீரோவாக மட்டுமல்லாமல் திரையுலகில் குணசித்திர நடிகராகவும் கவனம் ஈர்த்தார். அதன்படி பாலா - சூர்யா கூட்டணியில் உருவான நந்தா, சேரனின் பாண்டவர் பூமி, ஹரி – சிம்பு கூட்டணியில் வெளியான ‘கோவில்’, லிங்கு சாமி – விஷாலின் ‘சண்டைக் கோழி’ மற்றும் கிரீடம், முனி, காவலன், வேங்கை, மஞ்சப்பை, கொம்பன் போன்ற பல படங்கள் ராஜ் கிரண் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்களாக அமைந்தது. கடைசியாக இவரது நடிப்பில் கடந்த ஆண்டு பட்டத்து அரசன், விருமன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தன. மேலும் நீண்ட நாளுக்கு பின் தனுஷ் இயக்கத்தில் பவர் பாண்டி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தது குறிப்பிடதக்கது.

திரையுலகில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தனி அந்தஸ்தை பெற்ற ராஜ் கிரணுக்கு இன்றும் தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ராஜ்கிரன் அவரது முகநூல் பக்கத்தில் இஸ்லாமியர்களும் அவர்களின் மத மாண்பு குறித்தும் பதிவிட்டிருந்தார். அப்பதிவில்,

"இஸ்லாமியர்களுக்கு எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்துகொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...

"இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம் என்ற கொள்கையினால்" பொறுமை காக்க வேண்டும் என்று இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று பொறுமை காக்கிறோம். இந்தப் பொறுமையை தவறாகப் புரிந்துகொண்டு கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது ராஜ்கிரண் பதிவு இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டு பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் அவருடைய முகநூல் பதிவு ரசிகர்களால் வைரலாகி வருகிறது.