பிகே பிரைம் புரொடக்ஷன் மற்றும் காவ்யா பிலிம் கம்பெனி இணைந்து தயாரித்து இயக்குனர் ஜூட் ஆந்தனி ஜோசப் இயக்கத்தில் மலையாள திரையுலகில் வெளியான திரைப்படம் ‘2018’. கேரளாவில் 2018 ம் ஆண்டில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்து மக்களின் மனதில் நீங்கா சம்பவமாக இருந்து வரும் வெள்ள பெருக்கை மையப்படுத்தி உருவான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகியது. டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், குஞ்சாகா போபன், லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய நோபின் பால் இப்படத்திற்கு இசையமைத்திருப்பார்.

இப்படத்தின் முதல் பார்வை தொடங்கி திரைப்படம் வெளியாகும் வரை மலையாள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக இருந்தது. அதன்படி கடந்த மே மாதம் 5ம் தேதி மலையாளத்தில் உலகளவில் வெளியானது 2018 திரைப்படம். கேரளா மாநிலத்தின் மிகப்பெரிய பேரிடரை தழுவி உருவான இப்படத்தை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஆதரவினை அளித்து 2018 திரைப்படத்தை கொண்டாடினார். வெளியான சில நாட்களிலே ரூ 100 கோடி வசூலை எளிதாக எட்டி மலையாள திரையுலகில் தனி சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக மலையாளத்தில் நடிகரும் இயக்குனருமான பிரித்வி ராஜ் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் மோகன் லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படம் 12 நாட்களில் ரூ 100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது இந்த சாதனையை 11 நாட்களில் செய்து திரையுலகினரை ஆச்சர்யப் படுத்தியது. மேலும் 2018 திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டது. அதன்படி 2018 திரைப்படம் கடந்த மே 18ம் தேதி தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.

மலையாளத்திற்கு கிடைத்தது போலவே அனைத்து மொழி ரசிகர்களினாலும் 2018 திரைப்படம் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் பெருவாரியான வரவேற்பை இப்படத்திற்கு கொடுத்தனர். திரைப்படம் வெளியாகி 1 மாதம் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் 2018 திரைப்படம் கடந்த ஜூன் 7ம் தேதி சோனி லிவ் ஒடிடியில் வெளியானது. ஒடிடியிலும் ரசிகர்கள் இப்படத்திற்கு வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் 2018 திரைப்படம் உலகளவில் ரூ 200 கோடி வசூல் செய்து மேலும் புதிய சாதனையை படைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. முதல் முறையாக மலையாள திரையுலகில் ரூ 200 கோடி வசூலை பெற்ற திரைப்படம் என்ற பெருமையை 2018 திரைப்படம் பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இது தொடர்பான தகவல்களை இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.