மத்தியப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் அருகே உள்ள கட்லபுரா பகுதியில் உள்ள ஏரியில், விநாயகர் சிலை கரைப்பதற்காக அதிகாலை 4.30 மணிக்குச் சிலர் படகில் விநாயகர் சிலையுடன் ஏரியில் சென்றுள்ளனர்.

அப்போது, அதிக பாரம் காரணமாக திடீரென்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில், படகில் சென்ற அனைவரும் ஏரியில் மூழ்கினர். இதனையடுத்து, நன்றாக நீச்சல் தெரிந்த 5 பேர் மட்டும் அங்குள்ள சிலரின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

விபத்து குறித்து விரைந்து வந்த போலீசார் மற்றும் நீச்சல் வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தற்போது வரை 11 பேரின் உடல்கள் சடங்களாக மீட்கப்பட்டுள்ளன. மேலும் சிலர் நீரில் மூழ்கிவிட்டதாகவும், உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அவர்களை மீட்கும் முயற்சியில் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சிலை கரைக்கும் முயற்சியில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.