டேராடூனில் மாட்டு வண்டிக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளது நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, விதிமுறைகளை மீறுவோர்கள் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிக கடுமையான அபராதங்களும் வசூலிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சமீபத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த டிரக்கில் அதிக பாரம் ஏற்றிச் சென்றதால், அதன் உரிமையாளருக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது இந்தியா முழுவதும் வைரல் ஆனாது.

தற்போது, அதையும் மிஞ்சும் விதமாக, உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள ஒரு கிராமத்தில், ரியாஸ் ஹாசன் என்பவர் தனக்குச் சொந்தமான மாட்டு வண்டியை வயலுக்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, விவசாயிக்கு அதிர்ச்சி அளித்தனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ரியாஸ், தன்னுடைய வயலுக்கு வெளியில்தான் வண்டியை நிறுத்தியிருந்ததாகவும், அதற்கு ஏன் அபராதம் கட்ட வேண்டும் என்றும் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விவசாயி புகார் செய்துள்ளார்.

இதனையடுத்து, மணல் கடத்தும் மாட்டு வண்டி என்று நினைத்து அபராதம் விதித்ததாகவும், பில் புக் மாறியதால் தவறு நடந்துள்ளதாகவும் கூறிய போலீசார், அபராதம் விதித்த ரசீதை கேன்சல் செய்தனர்.

இதனிடையே, உத்தரகாண்டில் விவசாயியின் மாட்டு வண்டிக்கு போலீசார் அபராதம் விதித்தது, தற்போது வைராகி வருகிறது.