News தமிழ் Galatta Daily Photos Quiz Music

Tamil Movies Review


காத்துவாக்குல ரெண்டு காதல் திரை விமர்சனம் !
Release Date: 2022-04-28 Movie Run Time: 2.2 Censor Certificate: U/A

ஒரு மனிதனுக்கு யோகம் அடித்தால் அது அதிர்ஷ்டம். அதுவே துயரங்கள் நிறைந்து துரத்தி அடித்தால் அது துரதிர்ஷ்டம். அப்படி துரதிர்ஷ்டத்திற்கு பெயர்போன நபராக திகழ்கிறார் கதையின் நாயகன் ராம்போ. நெகட்டிவிட்டி மட்டுமே நிறைந்த இந்த ராம்போவின் வாழ்வில் கிடைக்கும் இரண்டு பாசிட்டிவ் மந்திரமே படத்தின் கதைக்கரு.

கண் இரண்டு, காது இரண்டு, கால் இரண்டு, கை இரண்டு, கிட்னி இரண்டு என உறுப்புகள் இரண்டாக இருக்க, இதயம் இரண்டாக இருந்தால் என்ன தவறு ? அதாவது காதல் இரண்டாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை காத்துவாக்கில் கூறியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

விக்கிபீடியா கூட சற்று தாமதமாக அப்டேட் ஆகும். ஆனால் ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் அப்டேட் ஆகியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். முக்கோண காதல் கதைகள் தமிழ் திரையுலகில் பல வந்தாலும், இப்படம் தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது. பூக்கள் கொண்டு காதல் காட்சிகள் எதிர்பார்க்கும் பூமர்களுக்கு இப்படம் தீனி போடாது என்பதே நிதர்சனமான உண்மை.

நொடிக்கு நொடி ஹார்ட்பீட்டை ஏற்றும் நாயகிகள் பற்றி பேசுவோம். பொறுப்புகள் நிறைந்த அன்பான அக்காவாக, கண்மணியாக வருகிறார் நயன்தாரா. எலைட்டாக இருந்தாலும், ஹைலைட் செய்யும் அழகுடன் கத்திஜாவாக தோன்றுகிறார் சமந்தா.

காலையில் கண்மணி, மாலையில் கத்திஜா என காதல் தேவதைகளின் பாச வலையில் சிக்குகிறார் ராம்போ.

ரொம்-காம் எனப்படும் ரொமாண்டிக் காமெடி படங்களில் பெர்ஃபார்மன்ஸ் இருக்குமா என்று கேட்போருக்கு முதல் பாதியில் வரும் கார் சீன் சிறந்த எடுத்துக்காட்டு. காரில் ஊர் சுற்றி பார்க்கும் காட்சி பலே.

ரியாலிட்டி டாக்-ஷோ நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் இளைய திலகம் பிரபு இளமை மாறாத சின்னத் தம்பியாகவே காணப்படுகிறார். துணை நடிகர்களான மாறன், ரெடின், ஹுசைனி படத்திற்கு பக்கபலம். அக்ரெஸிவாக பந்துவீசி பேட்ஸ்மேன்களை அலரவிட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், ஹை-ஃபைவ் பாய் பெஸ்ட்டியாக, நடிகராக களமிறங்கியுள்ளார்.

முதல் படம் துவங்கி 25-வது படம் வரை அதே அட்டகாசமான ஃபார்மில் உள்ள அனிருத்தை பாராட்ட ராகதேவனே இறங்கி வரவேண்டும். பாடல், பின்னணி என பின்னி பெடலெடுத்துள்ளார். இயக்குனர் விக்கி ஒருபுறமிருக்க, பாடலாசிரியர் விக்கியின் கைகளுக்கு பாஷா படத்தில் ரஜினியின் கைகளுக்கு அவரது கூட்டாளிகள் முத்தம் தருவது போல் முத்தமிட வேண்டும். ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் வரிகளை செதுக்கியுள்ளார்.

கடவுளுக்கே இரண்டு காதல் இருக்க, மனிதனுக்கு இரண்டு காதல் இருந்தால் என்ன தவறு ? என இரண்டாம் பாதி யோசிக்க வைக்கிறது. யோசிக்கும் அந்நேரத்தில் டூ...டூ... டூ பாடல் Vibeஐ ஏற்றுகிறது. என்ன மக்கள் செல்வன் சற்று ஸ்டெப்ஸில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஒரு கட்டத்தில் கிளாமராக இதயம் மாற, ஹ்யூமர் விருந்து வைக்கின்றனர் ரெடின் மற்றும் மாறன்.

ஒரு கட்டத்தில் ராம்போவை பார்க்கையில் பொறாமை ஏற்படுகிறது. 90ஸ் கிட்ஸாக இருந்தால், சற்று கூடுதல் பொறாமை இருக்கும் என்று ஆன்லைன் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. படத்தின் காஸ்ட்டியூம் டிசைனரை பாராட்ட வேண்டும். கண்மணிக்கு பிடித்த ப்லைன் சர்ட்டுகள், கத்திஜாவுக்கு பிடித்த செக்டு சர்ட்டுகள் என இரண்டும் கலந்த ஓர் ஆடையை வடிவமைத்துள்ளார். இரண்டாம் பாதியில் ராம்போ அதுபோன்ற ஆடையில் வரும்போது கண்களை கவர்கிறது.

லாஜிக் அத்துமீறல்கள் ஆங்காங்கே இருந்தாலும், தனது மேஜிக் நிறைந்த ஸ்க்ரீன்பிலேவால் ஈர்க்கிறார் விக்னேஷ் சிவன்.

திரையில் பார்த்த எதார்த்தம், தொழில்நுட்ப பகுதியான ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவற்றில் இருந்தது அற்புதம்.

முதல் பாதியிலும் சரி, இரண்டாம் பாதியிலும் சரி சில இடங்களில், சில இடங்களில் காதல் காட்சிகள் சற்று வேகம் குறைந்து காணப்படும். அப்படி வேகம் குறைந்து காணப்படும் நேரத்தில் ஸ்பூஃப் கொண்டும், ஹ்யூமர் காட்சிகள் கொண்டும் பேலன்ஸ் செய்கின்றனர்.

சமீபத்திய ட்ரெண்டில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி அதிக அளவில் காணப்படுகிறது. அது போன்ற உருட்டுக்களை சற்று ஓரங்கட்டி வைப்பது சாலச்சிறந்தது. ஃபேமிலி ஆடியன்ஸுக்கு இப்படம் தீனி போடாது.

Verdict

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா எனும் மூவர் கூட்டணியால் இப்படத்தை காத்துவாக்கில் திரையரங்கில் ரசிக்கும் வகையில் உள்ளது

Galatta Rating: (3.0 / 5.0)
Click Here To Rate