சண்டையில் கத்திக் குத்து வாங்கி கணவரைக் காப்பாற்றி மனைவி உயிரிழந்த நிலையில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த மீனம்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, தனது மனைவி சண்முகதாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளைச்சாமிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த அழகுராஜ்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

சம்பவத்தன்று, வெள்ளைச்சாமி வீட்டின் அருகே உள்ள உள்ள டீ கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அழகுராஜ், வெள்ளைசாமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். சண்டை பற்றிக் கேள்விப்பட்டு டீ கடைக்கு ஓடிவந்த சண்முகதாய், அழகுராஜை தடுத்துள்ளார்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென்று வெள்ளைச்சாமியை தாக்க முற்பட்டுள்ளார்.
இதில், சண்முகதாய் மீது கத்தி குத்து விழுந்துள்ளது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர், அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கடந்த 2009 ஆம் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, ஸ்ரீவில்லிபுது்தூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, கொலை செய்த அழகுராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அதிரடியாக உத்தரவிட்டார். இதனையடுத்து, அழகுராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.