16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீசார் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த ராணிமகாராஜபுரத்தை சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட இளம் காதல் ஜோடிகள், தேரிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனிமையான இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.


அப்போது, திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் சசிகுமாரும், ராணுவத்தில் காவலராக பணியாற்றும் பாலமுருகனும் ஒன்றாக இருசக்கர வாகனத்தில் அந்த வழியாகச் சென்றுள்ளனர். அப்போது, தனிமையில் இளம் காதல் ஜோடி அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்த அவர்கள், அந்த இளைஞனை மிரட்டி, அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த 16 வயது இளம் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், அந்த மாணவியை வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் தரவில்லை என்றால், வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று காவலர்கள் இருவரும் மிரட்டியதாகவும் தெரிகிறது. அந்த இளம் பெண்ணும், “எப்படியாவது பணம் தந்துவிடுகிறேன்” என்று உறுதி அளித்ததை அடுத்து, அந்த மாணவியை அங்கிருந்து அனுப்பி உள்ளனர்.

இவற்றையெல்லாம் தப்பிச் சென்ற அந்த இளைஞன், மறைவாக நின்று எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். இதனையடுத்து, அந்த இளம் காதல் ஜோடி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று நடந்ததைக் கூறி, காவலர்கள் இருவர் மீதும் புகார் அளித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதனிடையே, போலீசாரே 16 வயது பெண்ணை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பணம் கேட்ட விவகாரம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.