பள்ளியில் லீவ் லெட்டரை நேர்மையாக எழுதிய மாணவனுக்குப் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி மேல ராதாநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வரும் நிலையில், தீபக் என்ற மாணவன் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த காலாண்டுத் தேர்வில் கூட தீபக், 90 சதவீத மதிப்பெண்கள் பெற்று வகுப்பிலேயே முதல் மாணவனாகத் திகழ்ந்து வருகிறார். மேலும், பள்ளியில் தீபக் என்று சொன்னால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவன், சோர்வாகக் காணப்பட்டுள்ளான். பாடத்தில் சரியாகக் கவனம் செலுத்த முடியாமல் காணப்பட்டுள்ளான். இதனையடுத்து, லீவு லெட்டர் எழுதி ஆசிரியரிடம் கொடுத்து, தனக்கு இன்று விடுப்பு தரவேண்டும் என்று தாழ்மையாகக் கேட்டுக்கொண்டார்.

அந்த லீவு லெட்டரை ஆசிரியர் படித்துப் பார்த்தார். அதில், “நேற்று இரவு எனது ஊரில் கபடி போட்டி நடைபெற்றது. நான் அங்குச் சென்று பார்த்தேன். அதனால், எனது உடல் சோர்வாக உள்ளது. இதனால், இன்று மட்டும் விடுப்பு தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதியிருந்தார். இதைப் படித்த பார்த்த ஆசிரியர், மாணவனின் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு விடுப்பு கொடுத்தார்.

இதனையடுத்து, அந்த லீவு லெட்டரை தனது சமூக வலைத்தளத்தில் ஆசிரியர் பகிர்ந்திருந்தார். தற்போது, அந்த கடிதம் வைரலாகி வருவதுடன், நேர்மையாக லீவு கேட்ட மாணவனுக்கும், அதனை ஏற்று லீவு கொடுத்த ஆசிரியருக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. மேலும், ஊர் பெரியவர்களும், மாணவனை நேரில் அழைத்துப் பாராட்டி வருகின்றனர்.