அம்மனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கிரீடத்தை திருடன் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

‎தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் உள்ள துர்கா பவானி மந்தரில், அம்மன் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயிலில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட கிரீடம் சமீபத்தில் திருட்டுப்போனது.

இது தொடர்பாக போலீசாருக்கு புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக, கோயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், அம்மனிடமிருந்து கிரீடத்தைத் திருடும் முன்பு, துர்கை அம்மனிடம் திருடன் சாமி கும்பிட்டு, மன்னிப்பு கேட்கிறார். பின்னர் மீண்டும் தெய்வ பக்தியுடன் அம்மனை வணங்கி, பொறுமையாகக் கிரீடத்தைத் திருடி, அவர் தனது சட்டைக்குள் மறைத்து வைத்து எடுத்துச் செல்வது அப்படியே பதிவாகி உள்ளது.

இதனை பார்த்த போலீசார், சிசிடிவியில் உள்ளது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே, அம்மனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கிரீடத்தைத் திருடும், திருடனின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.