தமிழ்நாட்டில் முதல் முறையாக “தமிழ்நாடு தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசம் சுதந்திரம் அடைந்தபின், மாநில எல்லைகள் சரியாகப் பிரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு கட்டப் போராட்டங்களும், கோரிக்கைகளும் எழுந்தன.

அதன்படி, கடந்த 1956 ஆம் ஆண்டு மாநில மறு சீரமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, மாநில எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டன. அதே நேரத்தில், 1956 ஆம் ஆண்டு, நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. அப்போது, கன்னியாகுமரி உள்ளிட்ட சேரர்கள் ஆண்ட நிலப்பரப்பு பல, மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன.

அந்த அடிப்படையில் நவம்பர் 1 ஆம் தேதியை, தமிழ் உணர்வாளர்கள் மட்டும் “தமிழ்நாடு தினம்”மாக கொண்டாடி வந்தனர். இதனிடையே, இந்த விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று பல்வேறு தமிழ் ஆர்வலர்கள், அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, ஆண்டு தோறும் நவம்பர் 1 ஆம் தேதி “தமிழ்நாடு தினமாக” கொண்டாடப்படும் என்று, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, நவம்பர் 1ஆம் தேதியான இன்று “தமிழ்நாடு தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது. .

“தமிழ்நாடு தினம்” கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தலைமைச் செயலகம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைச் செயலக நுழைவு வாயிலில் தமிழகத்தின் வரைபடம், வண்ண விளக்குகளால் பொறிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாடு தினத்தையொட்டி அரசு சார்பில், தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சென்னை கலைவானர் அரங்கத்தில் இன்று மாலை 4.30 மணி அளவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் “தமிழ்நாடு தினம்” அரசு விழாவாக முதல் முறையாக மிக விசேசமான முறையில் கொண்டாடப்படுகிறது.