“முடிந்தால் சிவசேனாவை உடைத்துப் பாருங்கள்” என்று பாஜகவிற்கு சிவசேனா சவால் விடுத்துள்ளது.

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த ஒரு மாத காலமாக அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க இருந்த நிலையில், இன்று காலையில் பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக அஜித்பவாரும் பதவியேற்றனர்.

இதனையடுத்து, “பாஜக ஆட்சிக்கு ஆதரவளித்தது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்றும், அது தேசியவாத காங்கிரஸின் முடிவல்ல” என்றும் அக்கட்சித் தலைவர் சரத்பவார் வெளிப்படையாக அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மும்பையில் இன்று அவசர ஆலோசனை நடத்தின.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “பாஜகவின் செயல் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயல் என்றும், அதிகாரத்தில் இருக்கும் பாரதி ஜனதா, ஆட்சியைத் தக்கவைக்க மிக மோசமான அளவிற்குத் தரம் தாழ்ந்து செயல்பட்டுள்ளது” என்றும் குற்றம்சாட்டினார்.

“அதிகாலை நேரத்தில் அவசர அரசமாகப் பதவியேற்று, மகாராஷ்டிரா மக்கள் மீது பாஜக தலைமையிலான மத்திய அரசு துல்லியத் தாக்குதலை நடத்தியுள்ளது” என்றும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, “முடிந்தால், தைரியம் இருந்தால் சிவசேனாவை உடைத்துப் பாருங்கள். அப்படி நடந்தால் மகாராஷ்டிரா தூங்காது” என்றும் உத்தவ் தாக்கரே பாஜகவிற்கு நேரடியாகவே சவால் விடுத்தார். இதனால், மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையும் உருவாகி உள்ளதால், அங்குப் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.