சிறைச்சாலையில் குற்றவாளி ஒருவருக்குத் திருமணம் நடைபெற்ற சம்பவம் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் நபா பகுதியில் வசித்து வந்த மன்திப் சிங் என்கிறது துருவ், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவரைக் கொலை செய்ததாகத் தெரிகிறது.

கொலைக் குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக அவர், நபா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், மன்திப் சிங்கிற்கு தற்போது 35 வயது ஆவதால், அவருக்குத் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதற்காகப் பஞ்சாப் மாநிலம் கன்னா பகுதியைச் சேர்ந்த பவன் தீப் கவுர் என்ற பெண்ணை, மணப்பெண்ணாகத் தேர்வு செய்தனர்.

இதனையடுத்து, மன்திப் சிங் சார்பில் பரோல் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவர் தப்பித்துச் செல்ல திட்டமிடுவதாக போலீசார் தரப்பில் கூறி, பரோல் வழங்க கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பரோல் மறுக்கப்பட்டது.

இதனால், கடந்த 2016 ஆண்டு மணப்பெண் பவன் தீப் கவுர், மன்திப் சிங்கின் புகைப்படத்தை வைத்து, நூதன முறையில் திருமணம் செய்துகொண்டார். பின்னர், மன்திப் சிங்கையே கணவராக நினைத்து, பவன் தீப் கவுர் வாழத் தொடங்கினார்.

இந்நிலையில், திருமணம் தொடர்பாக மன்திப் சிங் மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். ஆனாலும், போலீசார் தரப்பில் மீண்டும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால், திருமணம் செய்துகொள்ளச் சிறைச்சாலைக்குள்ளேயே அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிபதி, சிறைச்சாலையில் திருமணம் செய்துகொள்ள 6 மணி நேரம் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும், திருமணம் தொடர்பான ஏற்பாடுகளைச் செய்ய, போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக நபா சிறையில் உள்ள குருத்வாராவில் திருமண ஏற்பாடுகள் விசேசமாக நடைபெற்றது. இதில், மணமக்களின் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து மன்திப் சிங் - பவன் தீப் கவுர் ஜோடிக்கு, சிறைச்சாலைக்குள்ளேயே உறவினர்கள் மத்தியில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. அப்போது, சிறையிலிருந்த போலீசார், அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.

இதனிடையே, நீதிமன்றம் உத்தரவுப்படி 6 மணி நேரம் கடந்ததால், மன்திப் சிங் மணப்பெண்ணை விட்டுப் பிரிந்து, மீண்டும், சிறையில் அடைக்கப்பட்டார். மணப்பெண்ணும், பிரிய மணமில்லாமல், மணமகனைப் பிரிந்த ஏக்கத்தோடு பிரிந்து சென்றார். இந்நிகழ்வு, சிறைச்சாலையில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.