உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வு, முதல்முறையாகப் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

உலகையே ஆட்டி படைத்து வரும் இந்த கொரொனா வைரசின் பரவல் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத வழிப்பாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வரும் திருவிழாக்கள் அனைத்தும் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவும் முதன் முறையாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அத்துடன், அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடக்காது என்று அறிவிக்கப்பட்டது.

எனினும், வேத விதிமுறைகளின் படியும், பக்தர்களுக்காகவும் மீனாட்சி திருக்கல்யாண வைபோகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

அதன்படி, இன்று காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா இனிதே தொடங்கியது. அதனைத்தொடர்ந்து புண்யாஹ வாசனம், பஞ்சகவ்யம், பாலிகை பூஜை, ரஷ்பந்தன பூஜை, கலச பூஜை, அக்னி காரியம், சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல், மங்கள நாண் அணிவித்தல், பொரியிடுதல், பூர்ணாஹுதி, விசேஷ தீபாராதனை, மந்திர புஷ்பம், சதுர்வேதம், பஞ்சபுராணம், ஆசீர்வாதம், பிரசாதம் என 15 நடைமுறைகளின் படி, மீனாட்சி திருக்கல்யாண வைபோகம் மங்களகரமாக நடைபெற்றது.

இந்த திருக்கல்யாணம் காட்சிகள் எல்லாம், இணையவழியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அனைவரும், தங்கள் வீட்டிலிருந்த படியே, http://maduraimeenakshi.org மூலம் திருக்கல்யாண நிகழ்வை நேரடியாகப் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அப்போது, மணக்கோலத்தில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் எழுந்தருளியது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

இந்த நிகழ்வில் சிவாச்சாரியார்கள், மங்கள வாத்தியக் கலைஞர்கள், சீர் பாதங்கள் உள்ளிட்ட 42 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதேபோல், போலீசார் தரப்பில் 3 பேர் மட்டும் கோயிலின் உள்ளே பாதுகாப்பு பணிக்கு அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்ட 42 பேரும் தெற்குக் கோபுர வாசல் வழியாக மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.