மகாத்மா காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்? என்று பள்ளித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில், சுபலம் ஷாலா விகாஸ் சங்குல் என்ற அரசு மானியம் பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், உள் மதிப்பீட்டுத் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில்,''காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?'' என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அதேபோல், '' மது விற்பனை அதிகரித்து வருவதையும், சட்டவிரோத மது உற்பத்தியாளர்களால் ஏற்படும் தொல்லைகள் பற்றியும் புகார் அளித்து, மாவட்ட காவல்துறைத் தலைவருக்குக் கடிதம் எழுதுக” என்றும் மற்றொரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

பள்ளித் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்விகளால், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த குஜராத் காந்தி நகர் மாவட்ட கல்வி அதிகாரி பாரத் வாதர், இந்த கேள்வித்தாள்களைத் தயாரித்தவர் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை வந்த பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

மேலும், சுபலம் ஷாலா விகாஸ் சங்குல் பள்ளிகளின் நிர்வாகத்தால் இந்த வினாத்தாள் தயாரிக்கப்பட்டதாகவும், மாநில கல்வித் துறைக்கும், இந்த கேள்வித் தாளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் விளக்கம் அளித்தார். அத்துடன், இதுகுறித்து புகார் வந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

இதனிடையே, மகாத்மா காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்? என்று, குஜராத் பள்ளித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.