கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் கருவைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் மாவட்டம் துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த சிறுமியின் வீட்டின் அருகே குடியிருந்த 2 பேர் சேர்ந்து, சிறுமியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து, இந்த சம்பவத்தை வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவதாக மிரட்டி அந்த சிறுமியை அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி, நடந்ததையெல்லாம் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு 3 மாதங்கள் ஆவதால், சிறுமி கருவுற்று இரண்டரை மாதங்கள் ஆகிறது. இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தயார், சிறுமியின் கருவைக் கலைக்கச் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 4 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியின் கருவைக் கலைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சேலம் அரசு மருத்துவமனை முதல்வருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.