திருமணம் செய்துகொள்ள காதலன் வற்புறுத்தியதால்காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி ஆக்ராவில் உள்ள அலிகர் ஜீவங்கர் பகுதியில் வசிக்கும் 23 வயது இளைஞர், அப்பகுதியில் உள்ள 19 வயது இளம் பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் நேர்ந்து, சில நாட்கள் காதலர்களாக ஊர் சுற்றியுள்ளனர்.

இதனையடுத்து, கடந்த ஒரு மாத காலமாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை அந்த இளைஞர், தன் வீட்டின் அருகில் உள்ள கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காதலி, காதலன் மீது திடீரென்று ஆசிட் வீசிவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்.

காதலி ஆசிட் வீசியதால், பாதிக்கப்பட்ட காதலனை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, அவருடைய கண்களில் ஆசிட் பட்டு, கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆசிட் வீசிய காதலியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “என்னைத் திருமணம் செய்துகொள்ள அவன் தொடர்ந்து வற்புறுத்தினான். எனக்கு அதில் விருப்பம் இல்லை. நான் திருமணம் செய்துகொள்ள மறுத்தால், நாங்கள் இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டுவிடுவேன் என்று அவன் என்னை மிரட்டினான். அதனால் தான், நான் ஆசிட் வீசினேன்” என்று அந்த காதலி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், போலீசார் அதிர்ந்துபோய் உள்ளனர்.

பின்னர், பாதிக்கப்பட்ட காதலனின் தயார் கூறும்போது, அவர்கள் இருவரும் பிரிந்து ஒரு மாதம் ஆகிவிட்டதாகவும், தொடர்ந்து அந்த பெண், தனது மகனுக்கு போன் செய்து திருமணம் செய்துகொள்ளத் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இருவருடைய வாக்கு மூலங்களும் இருவேறுவிதமாக இருப்பதால், போலீசார் குழப்பமடைந்துள்ளனர். மேலும், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.