திருமணமான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதான ஒரு தலைக் காதலால் சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரி அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரியாக உள்ள 45 வயதான ரஞ்சன் பிரதாப் சிங், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பாதுகாப்பு இயக்குநராக இருந்து வருகிறார். இவர், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு, சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும்போது, அதே தேர்வுக்குத் தயாரான இளம் பெண் ஒருவரைச் சந்தித்துள்ளார்.

20 வருடங்கள் கடந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, உத்தரகாண்டில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கச் சென்றபோது, அதே பெண்ணை சந்தித்துள்ளார். ஆனால், இப்போது அந்த பெண், அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி.

4 மாதங்களுக்கு முன்பு அந்த பெண் அதிகாரியைப் பார்த்தது முதல், அவரை ஒருதலையாய் காதலிக்க ஆரம்பித்துள்ளார். இதனை வெளியே சொல்லாமல், அந்த அதிகாரியிடம் இவர் நட்பாகப் பழகுவதுபோல், பேசி வந்துள்ளார். இதனிடையே அந்த பெண், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனதும், அவருக்குத் திருமணம் நடந்துள்ளது. தற்போது, தனது கணவருடன் அந்த பெண் அதிகாரி வசித்து வருகிறார்.

இந்நிலையில், நட்பாகப் பழகி வந்த ரஞ்சன் பிரதாப் சிங்கின் பேச்சு வார்த்தை பிடிக்காமல், அவருடன் பேசுவதைத் தொடர்ந்து, அந்த பெண் அதிகாரி தவிர்ந்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர், பெண் அதிகாரியைப் பழிவாங்குவதாக நினைத்து, பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கணவர் செல்லும் காரில் போதைப் பொருட்களை பதுக்கு வைத்துவிட்டு, சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் போல் போன் செய்து புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, விரைந்த சி.ஐ.எஸ்.எஃப். போலீசார், அந்த வாகனத்தில் சோதனை செய்தனர். அப்போது, அதில் 3 இடங்களில் போதைப் பொருட்கள் பதுக்கு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், போன் செய்து புகார் அளித்த நபர் குறித்து விசாரித்து வந்தனர். அப்போது, போன் செய்து புகார் செய்யப்பட்ட நம்பரைக் கண்டுபிடித்து, எந்த இடத்திலிருந்து புகார் செய்யப்பட்டதோ, அந்த இடத்திற்குச் சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ரஞ்சன் பிரதாப் சிங் தான், இதனைச் செய்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் தான், இந்த ஒருதலை காதல் காதை தெரியவந்தது. இதனையடுத்து, போதைப் பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.