ஆண் வாரிசுக்காக 16 வயது சிறுமியை மனைவியே, கணவருக்குத் திருட்டுத்தனமாகத் திருமணம் செய்து வைத்து விருந்தாக்கி உள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வையங்குடி கிராமத்தைச் சோந்த 35 வயதான அசோக்குமாருக்கு, செல்லக்கிளி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், தங்களுக்கு ஆண் குழந்தை இனி பிறக்காது என்று எண்ணி, தனது கணவருக்கு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைத்து, அதன் மூலம் ஆண் குழந்தை பெற்றுக்கொள்ளச் செல்லக்கிளி திட்டமிட்டார்.

அப்போது, அவர்கள் வீட்டின் அருகே 16 வயது சிறுமி ஒருவர், வறுமை காரணமாக 10 வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். அத்துடன், செல்லக்கிளி மற்றும் அவரது கணவர் அசோக்குமாருடனும் அந்த சிறுமி நன்றாகப் பழகி வந்துள்ளார்.

இந்த சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள திட்டம்போட்ட செல்லக்கிளி, தனது கணவரிடம் சென்று “ஆண் வாரிசுக்காக, அந்த பெண்ணை எப்படியாவது திருமணம் செய்துகொண்டு, எனக்கு ஆண் குழந்தை பெற்று தா” என்று கூறியிருக்கிறார்.

”கரும்பு திண்ண கசக்குமா என்ன!?” மனைவியே, தனக்கு 2 வது திருமணத்திற்கு பிளான் போட்டதை ரசித்து ஏற்றுக்கொண்ட கணவன், சிறுமியிடம் சில நாட்கள் நெருங்கிப் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி, மயக்கி உள்ளார். மேலும், “உன்னைத் திருமணம் செய்துகொள்ள என் மனைவி சம்மதித்துவிட்டார் என்றும், உன்னை ராணி மாதிரி பார்த்துக்கொள்வேன்” என்றும் அடுக்கடுக்கான ஆசை வார்த்தைகளைக் கூறி சிறுமியை மயக்கி உள்ளார்.

இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி, “சிறுமியைப் பக்கத்து ஊரில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று வருவதாக” சிறுமியின் வீட்டில் கூறிவிட்டு, சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று, தனது கணவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். பின்னர், கோனூர் கிராமத்துக்கு, தனது கணவருடன் அந்த சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். அங்குள்ள ஒரு வீட்டில் அசோக்குமாரும், அந்த சிறுமியும் 2 நாட்கள் தங்கிய நிலையில், அந்த சிறுமியை அவர் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனிடையே, வீடு திரும்பிய செல்லக்கிளியிடம், சிறுமி குறித்து அவரது பெற்றோர் கேட்டபோது சரியாகப் பதில் சொல்லாமல் இருந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்லக்கிளியைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் சிறுமியை, தனது கணவருக்கு விருந்தாக்கியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அசோக்குமாரையும் கைது செய்த போலீசார், கணவன் - மனைவி இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ஆண் குழந்தைக்காக, 16 வயது சிறுமியை தன் கணவருக்கு, மனைவியே விருந்தாக்கிய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.