மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இலவச லட்டு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழர்களின் கட்டடக்கலையில் மிக முக்கியமானதாகத் திகழ்கிறது மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில். நாள்தோறும் சுமார் 25 ஆயிரம் பேர் முதல் 30 ஆயிரம் பேர் வரையும், விடுமுறை மற்றும் விழா நாட்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரையும், கோயிலுக்குப் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், நாள்தோறும் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம், இலவசமாக வழங்க கோயிர் நிர்வாகம் முடிவெடுத்தது.

அதன்படி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இலவச லட்டு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி, காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

அதன்படி, இனி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, சொக்கநாதரைத் தரிசிக்க வரும் வழியில், அங்குள்ள முக்குறுணி விநாயகர் சன்னிதி அருகே, இந்த இலவச லட்டு பிரசாதம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த பிரசாதமானது, அதிகாலையில் கோயில் நடை திறப்பது முதல், இரவு கோயில் நடை சாத்தும் வரை நாள்தோறும் வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.